Friday, 12 August 2016

வீழ்வேன் என்று நினைத்தாயோ?


மூன்று மாதங்கள் பறந்து விட்டன. முந்தைய பதிவிற்கும் இப்பதிவிற்கும் ஆண்டுகள் பல ஆன ஒரு உணர்ச்சி. தமிழ் பேசுவோம் !


"போர்க்களத்தில் பிறந்துவிட்டோம் வந்தவை போனவை வருத்தமில்லை. காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலியொன்றும் மரணமில்லை"- நா.முத்துக்குமார் கூறுகிறார் புதுப்பேட்டை  "ஒரு நாளில் வாழ்க்கை இங்கே" பாடலில்.  

போர்யுத்தம்சண்டைசச்சரவு எல்லாம் ஒரு முடிவைக் காண சிலரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் எதிரொலி. ஒருவன் பிறந்த சில நொடிகள் முதல் தன் நிரந்தர ஓய்வறைக்குள் செல்லும் வரைஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு இடத்திலும் ஏதேனும் இடையூறுகளை எதிர்நோக்கித்தான் ஆக வேண்டியிருக்கிறது. காரணம் பல. ஆணிவேராய் இது வரை இருந்து வந்ததும்இருக்கப் போவதும்  ஆசை ஒன்று மட்டும் தான்.

தவழும் குழந்தை முதல் முறை நடக்க முயலும்போது கண்டிப்பாக கீழே விழ தான் செய்கிறது. அழுகையால் தன் இயலாமையைக் கூறத் தான் செய்கிறது. அந்த அழுகையோடு அந்த அத்தியாயம் முடிந்து விடுகிறதாஇல்லை தானே. மீண்டும் ஒரு முயற்சிதன் ஆசைத் தாயின் தூண்டுதலின் பேரால் மீண்டும் விழும். மீண்டும் மீண்டும் முயற்சி. நடப்பது தன் இயற்கை என்பதை உணர்ந்ததோ என்னவோ நடந்து பழகும் வரை அதை விடுவதாய் இல்லை.  

மழலையாய் இருக்கும்போது செய்த முயற்சியை ஏன் நம்மால் தெளிவு பெற்ற பின்னர் செய்ய முடிவதில்லைஎல்லாம் நம்மை நாமே கட்டிப் போட்ட கதை தான். நம்மால் இவ்வளவு தான் முடியும் என்று நம் முழு பலத்தை சோதனைக்கு உண்டாக்காமல் நிறுத்திக் கொள்கின்றோம். 



12.08.2016

                              "முடியும் வரை போராடு"

பார்ப்பது எல்லாம் வர்ணம் பூசுமென
கண்மூடிச் சொல்வது யார்?

கேட்பது எல்லாம் தேன் ஊற்றுமென
செவிசாய்த்துச் சொல்வது யார்?

சொல்வது எல்லாம் இன்பம் பயக்குமென
நாவசைத்துச் சொல்வது யார்?

தரையில்,
சுறுசுறுவென சுற்றித்திரியும் எறும்புகள் நாம்
வழிமறிக்கமுயலாமல் திரும்பிடுமா?

நீரில்,
துள்ளித்துள்ளி நீந்தித்தாவும் மீன்கள் நாம்
வலைவீசதாவாமல் மூழ்கிடுமா?

வளியில்,
சிலுசிலுவென பறந்தோடும் தென்றல் நாம்
விலைபேசபரவாமல் அடங்கிடுமா?

விளக்கில்,
பளபளவென ஒளிவீசும் சுடர் நாம்
கையசைக்கதயங்காமல் அணைந்திடுமா?

வானில்,
சடசடவென சிறகடித்தாடும் பறவை நாம்
வான்பறக்கநகராமல் இருந்திடுமா?

எதிர் பார்த்ததெல்லாம் எதிர் பார்த்தபடி
நடக்குமென எழுதிய விதி ஒன்றில்லை!

எடுத்துச் செய்வதெல்லாம் என்றும் சொன்னபடி
முடியுமென அளித்த உறுதி ஒன்றில்லை!

சிதறாமல் வழிதேடி கலங்காமல் போராடி
முயன்றால் முடியாத செயல் ஒன்றில்லை!

நண்பாவிடியும் வரை வழிதேடு
அசராமல்முடியும் வரை போராடு.!!

                                                                   - தமிழ்


உதாரணங்கள் சொல்ல, வாழ்ந்து மறைந்தும் நம்முடன் வாழ்ந்து கொண்டும் இருக்கும் உயிர்கள் பல. முயற்சியை ஊக்கப் பொருளாய்ப் பயன்படுத்தித் தான் பார்ப்போமே!! விழித்திட சில நேரம் போதும். உயர்ந்திட நேரம் கூடும். வெற்றி நமதே !! 


10 comments:

  1. Replies
    1. மகிழ்ச்சினு சொன்னால் அது தலைவர் வசனமாகிவிடுகிறது இப்போது !!

      Delete

  2. சிதறாமல் வழிதேடி கலங்காமல் போராடி
    முயன்றால் முடியாத செயல் ஒன்றில்லை!
    --------அருமை டா நண்பா!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி நண்பா

      Delete
  3. Nanba =D
    Un tamiluku nan adimai :)

    ReplyDelete
    Replies
    1. ஐயோ இது என்ன டா நண்பா புதுசா !

      Delete
  4. அருந்தமிழ்

    ReplyDelete
  5. "விழித்திட சில நேரம் போதும். உயர்ந்திட நேரம் கூடும்" எளிய வார்த்தை அரிய கருத்து பிரதாப் :) மேலும் நல்ல படைப்புகளுக்கு காத்திருப்போம் :)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நம்பிக்கை வீண் போகாது !!!

      Delete