Monday, 27 July 2015

பாரதத்தின் ரத்தினம் திரு கலாம்

  மாநிலம், மதம், மொழி, நிறம் ஆகியவற்றைக் கடந்து, கோடிக்கணக்கான இந்திய மாணவர்களுக்கும் ஏன் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் பிடித்த ஒரு நபர் என்றால் அது திரு.அ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் தான். "மிகவும் எளிய குடும்பம்  இப்படி ஒரு மாமனிதரைத் தந்தது இந்தியாவிற்கு வரம் தான்!" என்பதை ஆணித்தனமாகக் கூறுவதில்  பரவசம் கொள்ளும் உள்ளங்கள் இங்கு பல கோடிகள்.

 தன் வாழ்நாளில் இத்தனை வருடங்களை  இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்காக சமர்ப்பித்த இவரது அறிவியல் ஞானம் எத்தகையது. இறுதிவரை கற்கத் துடிக்கும் நேர்மையான  மாணவராக, கற்பிக்கத் துடிக்கும் உண்மையான ஆசிரியராக, இளம் தலைமுறைக்கு நல்ல வழிகாட்டியாக வாழ்ந்து காட்டிய இவரை நாம் என்ன சொல்லி போற்றுவோம் என்று தெரியவில்லை. துருதுருவென கேட்போரை ரசிக்க வைக்கும் இவரது குழந்தைப் பேச்சை இனி நாம் எங்கே சென்று கேட்பது?பார்ப்போர் மனதை நெகிழ வைக்கும் இவரது வெள்ளந்தியான புன்சிரிப்பை இனி நாம் எங்கே சென்று காண்பது??


 நமது 64வது சுதந்திர தினத்தன்று ஆசை ஆசையாய் எழுதிய வரிகள்...  

15.8.2010

            “இளையோர்களின் தலைவன்

ராமேஸ்வரம் தந்த ஒரு மனிதன் 
எந்நாளும் மாறாத ஒரு புனிதன் !

பொய்யின் பொருள் அறியாத மனிதன் 
தன்பால் குற்றம் சேராத புனிதன் !!

வெள்ளிப் புருவம் பெற்ற மனிதன் 
வைர உள்ளம் கொண்ட புனிதன் !

உதவும் கரங்கள் கொண்ட மனிதன் 
அன்பின் சிகரம் வென்ற புனிதன் !!

பெருமை வெறுக்கும் ஒரே மனிதன்
இளையோர் போற்றும் ஒரே புனிதன்

"அக்னிச் சிறகுகள்" செய்த மனிதன் 
பாரதம் பெற்ற அறிவியல் புனிதன் !!

மாணவர்கள் நண்பன் நமது கலாம் 
இதோ உமக்கு எங்கள் சலாம் !!
                                                                    - பிரதாப் குமார் 
                                                                             (தமிழ்)

         இந்தியாவின் 11ஆம் ஜனாதிபதியாகப் பணிபுரிந்த திரு கலாம் அவர்கள் நம் நாட்டின் மிக உயரிய செல்வமாகக் கருதியது- நாட்டின் இளைஞர்களை ! இளைய தலைமுறை மேல் எந்த அளவு நம்பிக்கை இருந்தால், இருக்கும் எண்ணற்ற தடைகளைக் கருத்தில் கொள்ளாமல் "2020ல் இந்திய வல்லரசாகும்" என்று கூறியிருப்பார் . மிகப் பெரிய சவாலை நம் முன் எடுத்து வைத்துச் சென்றுள்ளார் திரு கலாம் அவர்கள். 
   
   இப்பதிப்பை, கண்களில் ஈரப்பதம் காயாமல், இப்படியொரு நாளில் பதிவு செய்வேன் என்று துளியும் யோசித்ததில்லை.
நமக்கு நேரம் வந்துவிட்டது, சிந்திப்பதற்கு அல்ல செயல் புரிவதற்கு..  
இதயத்தில் சுமப்போம் உங்களையும், உங்கள் கனவுகளையும்...!! 

வாழ்க பாரதம்வளர்க பாரதம் !
ஜெய் ஹிந்த் !!

2 comments:

  1. God can be felt even by those who haven't seen Him/Her. This is what Dr. APJ Abdul Kalam was and is!! May His soul Rest In Peace!!!

    ReplyDelete