Saturday, 2 April 2016

நேரம்-போனால் வராது !!

                  நேரம்..காலம்..மணித்துளி..நொடி..நிமிடம்..நாழிகை..ஜாமம்..நாள்..வாரம்..மாதம்..வருடம்....!
       "காலம் பொன் போன்றது" - முன்னோர் கூற்று. சரி தான்.  கடந்து போன நொடி ஒன்றை மீண்டும் கொண்டு வர எத்தனைப் பெரிய மாயாவியாலும் முடியாத காரியம். சில பல திரைப்படங்களுக்கு மட்டும் விதி விலக்கு. பரபரப்பாகவே காணப்படும் இந்த அதிசய உலகில் நேரத்தின் மதிப்பை அளவிடுவது மிகவும் கடினமான செயல். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே மதிக்கப்படுகிறது.

        இந்த பதிவு 4,5 நண்பர்களை யோசிக்க வைத்தாலே எனக்கு அது பெரிய வெற்றியே! சிலருக்கு மனம் உறுத்தினால் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் தொடக்கத்திலேயே கூறிக் கொள்கின்றேன்.  நேரத்தைத் தெளிவாகச் செலவிட வேண்டும் தான். அதற்காக உடலை வருத்திக் கொண்டு அப்படிச் செய்ய வேண்டும் என்பது சொல்லிக் கொள்ளும் விஷயம் அல்ல, பாராட்டக் கூடிய ஒன்றும் அல்ல.

        முதலில் நினைவில் தோன்றுவது உணவும் தண்ணீரும். "தண்ணி குடிச்சாவது நான் உயிர் வாழுவேன் !"னு வியப்புடன் ஒருவர் கூறக் கேட்டிருப்போம். தண்ணீர் - உயிர் வாழ மிகவும் அவசியம் என்பதை அனைவரும் அறிவோம். மூன்று வருடம் விடுதியில் தங்கியிருக்கிறேன். தண்ணீர் குடிக்க அல்லது பிடிக்க 10 அடி தான்  நடக்க வேண்டுமென்றாலும் போக வேண்டுமா என்று பல முறை யோசிக்கும் உயிர்களின் எண்ணிக்கை ஏராளம். பக்கத்து அறையில் உள்ள நண்பன் வைத்திருக்கும் நான்கு சொட்டு தண்ணீரில் இரண்டு சொட்டு எடுத்து வாயில் தெளித்து விட்டு வெளியேறும்போது அங்கேயே அப்பொழுதே கண்ணத்தில் அறைந்துவிடத் தோன்றும்.

        காலை உணவு அருந்துதல்- ஒருவன் காலை உணவை அரசனைப் போன்று எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் உண்டு. 6-7  மணிநேரம் உறக்கத்திற்குப் பிறகு நன்றாக உணவு உட்கொண்டால் தான் வயிற்றினுள் சுரக்கும் அமிலத்தின் விளைவு பெரிதாக இருக்காது. னால் இரவு தூங்காமல் கைப்பேசியுடனும் மடிக்கணினியுடனும்  முழு நேரத்தையும் செலவிட்டு தூக்கத்தைத் துறந்து நாட்களைக் கடத்தும் நண்பர்கள் பலரை நான் பார்த்து வருகிறேன். காலை சாப்பிட வேண்டும் என்பதையே அவர்கள் மறந்து சில பல வருடங்கள் ஆயிற்று போலும். வகுப்பில் திணறுவதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொள்வர். ஒரு பக்கம் பாவமாக இருக்கும் ஒரு பக்கம் கோபமாகவும் இருக்கும். பெற்றோரிடம் அதைச் சாப்பிட்டேன் இதைச் சாப்பிட்டேன் என்று பொய் வேறு. யார் யாரோ நிறைய பேசிப் பார்த்தும் மாற்றம் உண்டாகவில்லை. போகப் போக விளைவுகளைப் புரிந்து நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு. இதைப் பார்க்கவும்.

29.6.2013

நேரமில்லை வலிக்கிறது! "
                                            
நேரமில்லை வலிக்கிறது நேரமில்லை வலிக்கிறது  வீட்டுக்குள்
சிரித்துப் பேசி ரசிக்க நேரமில்லை வலிக்கிறது வண்ணம்பல

எண்ணங்கள் எண்ணி ருசிக்க நேரமில்லை வலிக்கிறது கட்டங்கள் 
 தாவிக் குதித்து ஆட நேரமில்லை வலிக்கிறது சட்டங்கள் 

மதித்துப் பழகி வாழ நேரமில்லை வலிக்கிறது மெட்டுக்கள் 
கேட்டுப் பாடிப் பறக்க நேரமில்லை வலிக்கிறது யாருக்கும்

நேரமில்லை வலிக்கிறது நேரமில்லை வலிக்கிறது ஒருநாளும் 
நேரமில்லை வலிக்கிறது நேரமில்லை வலிக்கிறது 
     
                                                                                                      - தமிழ்

         அன்பர்களுக்கென நேரத்தைச் செலவிடுவது அடுத்து. உறவினர்களின் பெயர் கூட தெரியாமல் இருக்கும் இளைஞர்கள் பலர். நானும் அதில் ஒருவன் என்பதில் கொஞ்சம் வருத்தம் தான். அதெல்லாம் இருக்கட்டும்..அம்மா அப்பாவிடம் பேச கூட நேரமில்லை நமக்கு. அதை விட முக்கியமான வேலை இருக்கிறது அல்லவா நமக்கு. பிடித்த மாதிரி நம் நேரத்தைச் செலவிட, பிடித்த விஷயங்களைப்  பிடித்த நேரத்தில் செய்திட கூட நேரமில்லை. கஷ்டம் தான். எப்போது புரியும் இதன் முக்கியத்துவம்? எப்போது காணுவோம் பல மாற்றங்கள்? நாட்கள் வெகுதூரத்தில் இல்லை என்று நம்பிக்கை கொள்வோம்.