2016 ஆம் ஆண்டின் என் முதல் பதிப்பு ! அனைவருக்கும் தமிழின் வாழ்த்துக்கள். சமீபத்தில் யாரோ சொல்லி கேட்ட ஒன்று..."புத்தர் ஆசைகளைத் துறக்க வேண்டும் என்று எண்ணியது கூட ஆசை தான்!" அதன் விளைவாக இந்த பதிப்பை இங்கு பதிவு செய்கின்றேன்.
"ஆசை"- வாசிக்கக் கூட ஆசையாக இருக்கும் சொல். மனிதானாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் எளிதில் தொற்றிக் கொள்ளும் ஒன்று. யார் சொல்லியும் வரத் தொடங்குவதில்லை, பெற்ற தாயும் அவர்களுள் அடக்கம். உதாரணம் , குழந்தைக்கு ஒரு விளையாட்டுப் பொருளின் மீது ஆசை வளர யார் காரணம்? அந்த குழந்தையே அன்றி வேராருமில்லை. அங்கிருந்து துவங்குகிறது மனிதனின் ஆசை அத்தியாயம்.
வயதுக்கு ஏற்ப ஒருவரது ஆசையின் இயற்கை மாற்றம் கொள்வதை அனைவரும் நன்றாக உணர்ந்திருப்போம், கண்டும், கேட்டும், வாசித்தும் புரிந்தும் ! ஒரு பருவத்தில், பள்ளிக்குக் கூட செல்லாமல், எந்நேரமும் விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசை. கொஞ்சம் வளர்ந்த பின், நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டும் கேலி செய்து கொண்டும் இருக்க வேண்டும் என்று ஆசை. அதே பருவத்தில், திரைப்படத்தில் வரும் தன் அபிமான நட்சத்திரம் செய்யும் அனைத்து வீர தீர செயல்களை எல்லாம் செய்து ரசிக்க வேண்டும் என்று ஆசை. வேலை செய்து தன் சொந்த காலில் நிற்கத் தொடங்கிய பின், பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் தன் நிலையை சமுதாயத்தில் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று ஆசை.
ஒரு கட்டத்தில் பெற்றோர்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும், அவர்களது சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசை பிறக்கும். காலம் செல்லச் செல்ல குழந்தைப் பருவத்திற்கே மீண்டும் சென்று விட வேண்டும் என்ற தீராத ஆசை ஒவ்வொரு மனிதனின் மனதிலும் தொற்றிக் கொள்ளும் என்பதில் துளியும் சந்தேகம் யாருக்கும் பிறப்பதில்லை.
தனிப்பட்ட விதத்தில், என்னைச் சுற்றி உள்ள அனைவரையும் மகிழ்ச்சியாய் என்றும் காண வேண்டும் என்ற ஆசை என்னுள் இருக்கும். சில முறை இதை நிலைக்க வைக்க முடியாமல் போன தருணங்கள் உண்டு. அம்மா அப்பாவிடம், திட்டு வாங்காமல் சில நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசை. அது நடப்பதும் இல்லை. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், அதை நான் நடக்க விடுவதில்லை!!
6.10.2014
"ஆசைகள் நிரந்திரமில்லை"
விடியலின் விடியலாய் விடியவும் ஆசை தான்
விதையின் விதையாய் விதைக்கவும் ஆசை தான் !
மதியின் குளிரூட்டியாய் விளங்கவும் ஆசை தான்
மழையின் குளமாய்த் தேங்கவும் ஆசை தான் !
பிறப்பின் பிறப்பாய்ப் பிறக்கவும் ஆசை தான்
புகழின் புகழாய்ப் பரவவும் ஆசை தான் !
வானவில்லின் ஓவியனாய்ப் பறக்கவும் ஆசை தான்
நேரத்தின் கடிகாரமாய் இருக்கவும் ஆசை தான் !
பறவையின் சிறகுகளாய் முளைக்கவும் ஆசை தான்
பார்வையின் விழிகளாய் நிலைக்கவும் ஆசை தான் !
திறமைகளெல்லாம் பலமாய்ப் புலப்பட இதுவும் சாத்தியமே
ஆசைகளெல்லாம் நிஜமாய் நிகழ்ந்திட எதுவும் சாத்தியமே !!
-தமிழ்
ஆசைகள் நிரந்திரமில்லை. ஆசைகள் தரும் பல வித அனுபவங்களே நிரந்திரம்.