Monday, 14 December 2015

"யாவும் கவிதையே!"


              தொழில்நுட்பக் காரணங்கள் மற்றும் தனிப்பட்ட காரணங்கள் இந்தப்  பதிவு மேடையினை முடக்கிப் போட்டதில் பெரும் வருத்தம் தான். எனினும் புதிய பதிவினை இன்று பதிய இருப்பதாலும் மேலும் பதிவுகள் தொடர இருப்பதாலும் மகிழ்ச்சி. 

          "கவிதை"- மன்னர்கள் தொடங்கி ஏழை எளிய மக்கள் வரை அனைவரும் ஆசையாய்க் கேட்க விரும்பும் ஒரு மாயை. எண்ணற்ற கவிஞர்களையும் அவர்கள் இயற்றிய கணக்கில்லா படைப்புகளான கவிதைகளையும் இசைப் பாடல்களைப் பெற்ற பெருமை இந்த உலகிற்கு உண்டு. கவிதை என்பது இலக்கணத்தை முழுவதுமாய்ப் பின்பற்றுமா? "இல்லை". ஏதேனும் ராகத்தைத் தொற்றி இயற்றப்படுமா? "இருக்கலாம்". மெய்யான நிகழ்வுகளையும், மனிதர்களின் ஆற்றல்களையும் வெளிப்படுத்துமா?- "கொஞ்சம் கொஞ்சம்". சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் "பொய்ப் போன்ற மெய்யும், மெய்ப் போன்ற பொய்யும் ஒன்றே இணைந்தால் அது கவிதை". பழிப்பது போல புகழ்தல், புகழ்வது போல பழித்தல் என்று தமிழ் இலக்கணம் கூறுவது போல தான் இதுவும்.

             கவிதையைப் பற்றி கவிதை எழுதுவது என் பல நாள் ஆசை. மூன்று நான்கு மாதங்களுக்கு முன்,  என் இரட்டைப் பிறவி, "நீ வேணும்னா  கவிதைய பத்தி கவிதை எழுது டா!" என்றான். விளையாட்டாய்ச் சொன்னானா இல்லை நிஜமாகத் தான் சொன்னானா என்பது இன்று வரை எனக்குத் தெரியாதுனி தெரியப் போவதும் கிடையாது. அவ்வளவு ஒற்றுமை இருவருக்கும். 

            ஏதாவது வித்தியாசமாய் யோசித்தாலோ, திரைப்படங்களில்  காண்பது அழகாய்த் தோன்றினாலோ அதனை என் கைப்பேசியில் குறுந்தகவலை இயற்றுவது போல அதில் குறித்துக் கொண்டு இருப்பேன். எப்படி முடிப்பது என்று தெரியாமல், மனதில் தோன்றுவதை மிகவும் எளிமையான வார்த்தைகளாய் மாற்றி தாளில் எழுதி இக்கவிதையை முடித்தது நினைவில் உள்ளது.

18.10.2015
                                    "யாவும் கவிதையே!

கடற்கரை மணலில் மாலைநேரம் நடந்திட 
கால்களைத் தொட்டுச் செல்லும் அலைகள் - கடல் கவிதை 

மழைநாள்  இடையில் வானவில் படர்ந்திட 
கண்களைக் கட்டிப் போடும் நிமிடங்கள்- நிறக் கவிதை 

வீட்டுத் தோட்டத்தில் அழகிய பட்டாம்பூச்சி 
விரல் பட்ட மறுகணம் பறந்தோடும்- மலர்க் கவிதை 

மழையில்லா சாலையில் குடையோடு சென்றிட 
மடக்கிய மறுநொடி மழைச் சொட்டுக்கள்- மழைக் கவிதை 

பிடித்த நிகழ்வொன்று கண்முன் நிகழ்ந்திட 
ரசித்த பாட்டொன்றை உதிர்த்திடும் உதடுகள்- மனக் கவிதை 

வேலைக் களைப்பால் சோர்ந்து நின்றிட 
நெஞ்சை அள்ளும் குழந்தையின் வார்த்தைகள்- நிஜக் கவிதை 

பார்ப்பது எதிலும் கவிதைத் துண்டுகள் 
கேட்பது எதிலும் கவிதை  மெட்டுக்கள் !

எழுத்துக்கள் மலரும் கவிதையின் கவிதையாய் 
எழுத்துக்கள் தொடரும் கவிதையின் கவிதையாய் !!
                                      
                                                                            -தமிழ் .

               உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் கவிதை தான், ஒவ்வொரு உயிரும் கவிதை தான். ஏன் அவர்களால், அவர்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் கவிதை தான். மகிழ்ச்சியைத் தருவதாய் இருந்தாலும் சரி, சற்று சிந்திக்க வைப்பதாய் இருந்தாலும் சரி, "யாவும் கவிதையே!!". அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என்றால் நம் வாழ்வும் அழகிய இனிய கவிதையே...! கவிதைகள் தொடரட்டும்...!
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif