Sunday, 9 August 2015

"அப்பா-முதல் நண்பன்"

  "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே..தாலாட்டுப் பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே.!"-"கேடி பில்லா கில்லாடி ரங்கா" திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது. எனக்குப் பிடித்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் வரிகள். தந்தை-மகள் இடையேயான உறவை "ஆனந்த யாழை" என்ற பாடலில் அள்ளித் தெளித்து தேசிய விருது பெற்றவர். வரிகள் இரண்டு தான்.. ஆனால் அர்த்தங்கள் ஆயிரம்.!.

   தந்தை-தன் அன்பை வெளிப்படுத்தத் தெரியாத ஒரு ஜீவன். குடும்பத் தலைவன் என்பதனால் தான் என்னவோ பொறுப்புகள் பலவற்றைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டு நேரத்தைச் சரியாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இது ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது தான்.என் கதைக்கு வருகிறேன்...

   உறவினர்கள் கூறுவர் "குமார் அமைதியானவர் என்று". எங்களுக்கு மட்டுமே தெரியும் அவர் பேசுவது எப்படி என்று. ஒவ்வொரு மகனும் சொல்வது தான் "ஒரு இடத்தில்  எப்படி நடந்து கொள்ள  வேண்டும், ஒருவரிடம் எப்படி பேச வேண்டும்  என்பதை அப்பாவைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன்". உண்மை தான். பொறுமையாய் யோசித்தால் வழி பிறக்கும்-பார்த்து உணர்ந்ததுண்டு அவரிடம்.

  முதலில் பிறந்ததால் தான் என்னவோ பெரிய அண்ணன் சண்முகம் மேல் அப்பாவுக்குப் பாசம் கொஞ்சம் தூக்கல் தான். வெளிப்படுத்தாவிட்டாலும் சில நடவடிக்கைகளால் தெரிந்து விடும். அடுத்தது என் இரட்டைச் சகோதரன்( நாங்கள் தான் சொல்லிக் கொள்ள வேண்டும் இரட்டையர்கள் என்று! ) பிரதீப். சிறு வயதில், அவன் செய்த சேட்டைகள் வெளியே தெரிந்ததில்லை...மாறாக நான் செய்த சேட்டைகள் வெளியே தெரியாமல் போனதில்லை. விளைவு அவனுக்கு சேர்த்து நான் வாங்குவேன் அம்மாவிடம் திட்டும், பேச்சும்  அப்பாவிடம் அடியும் உதையும். சில நேரம் ஏன் என்று யோசித்திருக்கிறேன் .வருடங்கள் செல்ல "அதுவே பழகிவிட்டது!இது கூட காரணமாய் இருக்கலாம் எனக்கும் அப்பாவுக்கும் உள்ள பிணைப்பு இவ்வளவு வலுவானதற்கு..

30.7.2014
              "அப்பா-என் முதல் நண்பன்

"அப்பா" எனும் நண்பனே!

சரியெது தவறெது கற்றேன் உன்னிடம் 
சிரிப்பது முறைப்பது பார்த்தேன் உன்னிடம்! 

நடையெது மிடுக்கெது உணர்ந்தேன் உன்னிடம் 
எழுத்திது சொல்லிது படித்தேன் உன்னிடம் !

பார்த்ததெல்லாம் விழியின் வாசலில் கொட்டிக் கிடக்க 
கேட்டதெல்லாம் செவியின் சன்னலில் ஒட்டிக் கிடக்க !

சொன்னதெல்லாம் மனதில் இன்றும் எட்டிப் பார்க்க 
நடந்ததெல்லாம் நினைவில் என்றும் கட்டி இழுக்க ! 

கண்ணீர்கண்டு ஆறுதல்சொன்ன நாள் ஒன்று என்நினைவில் 
ஆறுதல்சொல்ல நான்அழும் நாளொன்று என் கனவில் ! 

அடிஉதையும் அணைப்பான சுகநினைவு உனக்குள் 
நாளொன்றும் இனிப்பான மனநிறைவு எனக்குள் !!   
                                     -பிரதாப் குமார் 
                                         (தமிழ்) 

  ஆடைகள் தேர்வு செய்வதில் இருந்து , பொறியியல் துறை தேர்வு செய்து வரை எதையும் வற்புறுத்தாமல் எங்களுக்குத் தோன்றுவதை செய்ய அனுமதிப்பவர். எல்லோருக்கும் அமைந்துவிடாது இப்படி ஒரு வாய்ப்பு, கற்றுக் கொள்ளவும் தேற்றிக் கொள்ளவும். வரம் பெற்றவன் என்ற உணர்வு தொற்றிக்கொள்கிறது. அவர் எதிர்பார்ப்பது ஒன்று தான், "செய்யும் வேலையை ஒழுங்கா செய்யணும்!!" எதிர்க் குரல்-"அவ்ளோ தான..பண்ணிடலாம் அப்பா!"