Monday, 14 December 2015

"யாவும் கவிதையே!"


              தொழில்நுட்பக் காரணங்கள் மற்றும் தனிப்பட்ட காரணங்கள் இந்தப்  பதிவு மேடையினை முடக்கிப் போட்டதில் பெரும் வருத்தம் தான். எனினும் புதிய பதிவினை இன்று பதிய இருப்பதாலும் மேலும் பதிவுகள் தொடர இருப்பதாலும் மகிழ்ச்சி. 

          "கவிதை"- மன்னர்கள் தொடங்கி ஏழை எளிய மக்கள் வரை அனைவரும் ஆசையாய்க் கேட்க விரும்பும் ஒரு மாயை. எண்ணற்ற கவிஞர்களையும் அவர்கள் இயற்றிய கணக்கில்லா படைப்புகளான கவிதைகளையும் இசைப் பாடல்களைப் பெற்ற பெருமை இந்த உலகிற்கு உண்டு. கவிதை என்பது இலக்கணத்தை முழுவதுமாய்ப் பின்பற்றுமா? "இல்லை". ஏதேனும் ராகத்தைத் தொற்றி இயற்றப்படுமா? "இருக்கலாம்". மெய்யான நிகழ்வுகளையும், மனிதர்களின் ஆற்றல்களையும் வெளிப்படுத்துமா?- "கொஞ்சம் கொஞ்சம்". சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் "பொய்ப் போன்ற மெய்யும், மெய்ப் போன்ற பொய்யும் ஒன்றே இணைந்தால் அது கவிதை". பழிப்பது போல புகழ்தல், புகழ்வது போல பழித்தல் என்று தமிழ் இலக்கணம் கூறுவது போல தான் இதுவும்.

             கவிதையைப் பற்றி கவிதை எழுதுவது என் பல நாள் ஆசை. மூன்று நான்கு மாதங்களுக்கு முன்,  என் இரட்டைப் பிறவி, "நீ வேணும்னா  கவிதைய பத்தி கவிதை எழுது டா!" என்றான். விளையாட்டாய்ச் சொன்னானா இல்லை நிஜமாகத் தான் சொன்னானா என்பது இன்று வரை எனக்குத் தெரியாதுனி தெரியப் போவதும் கிடையாது. அவ்வளவு ஒற்றுமை இருவருக்கும். 

            ஏதாவது வித்தியாசமாய் யோசித்தாலோ, திரைப்படங்களில்  காண்பது அழகாய்த் தோன்றினாலோ அதனை என் கைப்பேசியில் குறுந்தகவலை இயற்றுவது போல அதில் குறித்துக் கொண்டு இருப்பேன். எப்படி முடிப்பது என்று தெரியாமல், மனதில் தோன்றுவதை மிகவும் எளிமையான வார்த்தைகளாய் மாற்றி தாளில் எழுதி இக்கவிதையை முடித்தது நினைவில் உள்ளது.

18.10.2015
                                    "யாவும் கவிதையே!

கடற்கரை மணலில் மாலைநேரம் நடந்திட 
கால்களைத் தொட்டுச் செல்லும் அலைகள் - கடல் கவிதை 

மழைநாள்  இடையில் வானவில் படர்ந்திட 
கண்களைக் கட்டிப் போடும் நிமிடங்கள்- நிறக் கவிதை 

வீட்டுத் தோட்டத்தில் அழகிய பட்டாம்பூச்சி 
விரல் பட்ட மறுகணம் பறந்தோடும்- மலர்க் கவிதை 

மழையில்லா சாலையில் குடையோடு சென்றிட 
மடக்கிய மறுநொடி மழைச் சொட்டுக்கள்- மழைக் கவிதை 

பிடித்த நிகழ்வொன்று கண்முன் நிகழ்ந்திட 
ரசித்த பாட்டொன்றை உதிர்த்திடும் உதடுகள்- மனக் கவிதை 

வேலைக் களைப்பால் சோர்ந்து நின்றிட 
நெஞ்சை அள்ளும் குழந்தையின் வார்த்தைகள்- நிஜக் கவிதை 

பார்ப்பது எதிலும் கவிதைத் துண்டுகள் 
கேட்பது எதிலும் கவிதை  மெட்டுக்கள் !

எழுத்துக்கள் மலரும் கவிதையின் கவிதையாய் 
எழுத்துக்கள் தொடரும் கவிதையின் கவிதையாய் !!
                                      
                                                                            -தமிழ் .

               உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் கவிதை தான், ஒவ்வொரு உயிரும் கவிதை தான். ஏன் அவர்களால், அவர்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் கவிதை தான். மகிழ்ச்சியைத் தருவதாய் இருந்தாலும் சரி, சற்று சிந்திக்க வைப்பதாய் இருந்தாலும் சரி, "யாவும் கவிதையே!!". அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என்றால் நம் வாழ்வும் அழகிய இனிய கவிதையே...! கவிதைகள் தொடரட்டும்...!
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

Sunday, 13 September 2015

"நானும் மதுரைக்காரன் தான் டா! "


        நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதத் தொடருவதால் வார்த்தைகள் தேர்வு செய்வதில் சில இடங்களில் திணறுவதை உணர்கிறேன்! "மதுரை" என்று சொன்னதும் சில விஷயங்கள் நினைவுக்கு வரும் மதுரையில் வாழாத மதுரையைப் பற்றி  முழுமையாய்த் தெரியாத நம் மக்களுக்கு. அப்படிப்பட்ட மக்களைப் பொதுவாக இரண்டு ரகமாய்ப் பிரிக்க நினைக்கின்றேன். முதல் ரக மக்களுக்கு நினைவில் வருவது-மீனாட்சி அம்மன் கோவில், மல்லிகைப் பூ, ஜிகர்தண்டா. இரண்டாம் ரக மக்களுக்கு-வெட்டு, குத்து அடிதடி, சண்டை. மதுரைக்காரர்களுக்குத் தெரியும் "இது மட்டும் மதுரை இல்ல, அதுக்கும் மேல...!!"என்று
      
                 மதுரையில் பிறந்து, நினைவு தெரிந்து பத்து வருடங்கள் மதுரையிலேயே சுற்றித் திரிந்தவன் நான். எனக்கும் என் போன்ற பலருக்கும் "என் ஊரின் உண்மை முகம் இது தான் என்று உலகம் அறிந்து கொள்ள வேண்டும்" என்ற ஆசை எப்பொழுதும் தொற்றிக்கொண்டு தான் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லைஅதை நிறைவேற்ற "என் பெயர் தமிழை" ஒரு மேடையாகக் கருதி இப்பதிப்பினை எழுதுகிறேன்.

      முதல் ரக மக்கள் அப்படி நினைத்துக் கொள்ள முக்கியக் காரணம் மதுரையின் வரலாறு, கதைகள் மற்றும் மதுரைக்கு வரும் விருந்தாளிகள் செய்யும் வேலை. கோவில்கள்  இருக்கு தான் இல்லை என்று சொல்ல வில்லை. கோவில்கள் மட்டுமே மதுரை இல்லை என்று சொல்கிறோம். இரண்டாம் ரக மக்கள் அப்படி நினைத்துக் கொள்ள ஒரே காரணம் தமிழ்த் திரையுலகம் தான். மதுரையைச் சுற்றிச் சுழலும் கதைக்களம் என்றாலே கதாப்பாத்திரங்கள் கையில் அல்லது லுங்கிக்கும் உடலுக்கும் இடையில் கத்தி வைத்துக் கொண்டு சுற்றுவார்கள்உயிர் நண்பனையோ  காதலியையோ ஏதோ ஒரு வகையில் வம்பு செய்த ஒரே காரணத்தால், அவனையும் அவன் கூட்டாளிகளையும் விரட்டி விரட்டி பழிவாங்குவார் கதாநாயகன். இது தான் மதுரையா? ஒவ்வொரு முறை இது போன்ற காட்சிகளைப் பார்க்கும் போதும்இதழ்களில் வாசிக்கும்போதும் வெறுப்பெரும். சில படங்கள் உண்டு இதற்கு விதிவிக்காய்!

       என்னைப் பொறுத்த வரை மதுரை சற்று வித்தியாசமான நகரம். மேற்கண்ட கோவில்களும் வன்முறையும் உண்டு தான்னால் அதற்கு மேலே ஒன்று உள்ளதென்று சொல்லியிருந்தேன். அது-நட்பு, பாசம். யார் என்று தெரியாத ஒருவர்நீங்கள் ஒரு உதவி என்று கேட்க நினைக்கும் முன் உதவ முன் வரும் பலரை நான் பார்த்திருக்கிறேன். "மதுரைக்காரர்கள் பாசக்காரர்கள்!" என்றொரு பேச்சு உண்டு. உண்மை தான். புதிதாய்ப் பார்ப்பவர்களிடமும் பல ஆண்டுகள் பேசிப் பழகியது போல் மிகவும் சகஜமாய் ஒருவரால் பேச முடியும் என்று நான் பார்த்து உணர்ந்துகொண்டது மதுரை மக்களிடம் தான்


8.11.2011
          
         "மதுரை-பாசமும் வீரமும்"    

சரித்திரத்தில் தனக்கென உயர்இடமும்,
சங்கத்திற்கு தானே இடமாகவும்

தமிழுக்குத் தன்னைத் தானஞ்செய்து 
கலைக்கு முன்மாதிரியாய்த் திகழ்ந்து 

வீரம் தரும் நிகழ்வையும் 
பாசங் காட்டும் உயிரையும்-பெற்று 

காந்திக்கு ஓர் இடமும்
நாயகருக்கு ஓர் இடமும்-தந்து 

மனங் கமழும் மல்லிகையும் 
மனங் கவரும்தன் நம்பிக்கையும்-படைத்து 

அன்பும் கொடையும் கூடிவாழும்  ஊர்ஒன்றே 
பார்சொல்லும் அஃது மதுரை என்றே 
                       -பிரதாப் குமார் 
                                              (தமிழ்)  


      மரியாதைக்கு கோவை, ஈரோடு,சேலம் மக்கள் என்றால், எளிமையாய் உரிமையாய்ப் பேசிப் பழகுவதற்கு மதுரை மக்கள். "சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை" என்று கூற விரும்பவில்லை. சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான் திரைப்படங்கள் காட்டும் மதுரை மட்டுமே மதுரை அல்ல. மதுரையின் மனம் அறிய, குணம் புரிய செய்வேண்டியதெல்லாம் ஒன்று தான். "திரைப்படங்கள் காட்டும் மதுரையை முழுமையாய் நம்பாமல், மதுரைக்கே சென்று ஓரிரு நாட்கள் இருந்து மக்களிடம் பேசிப் பாருங்கள்." நான் சொல்வது புரியும்!